தோல்தானம் – ஒரு விளக்கம்

உடல் உறுப்பு தானம் என்பது தன் உடம்பிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒருபகுதியையோ, மரணவாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து உறுப்புதானம் தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

ஒளி பெற கண்தானம்! உயிர்வாழ தோல் தானம்!

தோல் வங்கியின்பயன்என்ன?
தீக்காயம்பட்டவர்களின் தோல் எரிந்து விடுவதால் கிருமிகள் வெகு விரைவில் உடம்பில் பரவுகிறது. உடலில் எரிந்த பகுதி சிறிதாக இருக்கும்பொழுது, அவர்களிடமிருந்தே தோல் எடுத்து புண்களை சரி செய்ய முடிகிறது. மிகுதியாக தீக்காயம்பட்டவர்களின் எஞ்சியிருக்கும் தோல் குறைவாக இருப்பதால் அவற்றை நாம் பயன்படுத்த முடிவதில்லை.ஆனால் 40%-க்கும் மேல் தோல் எரிந்து விட்டால் புண்களின் மூலம் கிருமிகள் எளிதில் பரவி நோயாளிகள் இறக்க நேரிடும். இத்தகைய நோயாளிகளுக்கு தோல்வங்கியின் மூலம் பெற்ற தோலினை புண்களின் மேல் வைத்து கிருமிகள் மேலும் உடம்பில் பரவாமல் நோயாளிகளை காப்பாற்றமுடிகிறது.

எப்பொழுது தோல் தானம் செய்யலாம்?
கண்தானம் போல் ஒருவர் மரணமடைந்த 6 மணி நேரத்திற்குள் தோல் தானம் செய்யலாம்.

யார் தோல் தானம் செய்யலாம்?
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாரும் தோல்தானம் செய்யலாம்.

யாரிடமிருந்து தோல்தானம் பெற முடியாது?
புற்று நோய், எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, காசநோய் மற்றும் உடம்பு முழுவதும் கிருமிகள் பரவும் நிலையில் இருந்தால் தோல் தானம் செய்யமுடியாது.

உடம்பில் எங்கிருந்து தோல் எடுக்கப்படும்?
இரு தொடைகளிலிருந்தும், இருகால்களிலிருந்தும், முதுகிலிருந்தும் தோல் எடுக்கலாம்.

எடுக்கும் தோல் எப்படி பாதுகாக்கப்படுகிறது?
எடுக்கப்படும் தோல் பல்வேறு சோதனைகள் செய்து பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாகவைக்கப்படுகிறது. பின் அதில் கிருமிகள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கிருமிகள் இல்லை என்று தெரிந்த பின் தானமாகப் பெற்ற தோல் பாதுகாக்கப்பட்டு 5 வருடங்கள் வரை பயன்படுத்த ப்படுகிறது.

தோல் எடுக்க ஆகும் கால அளவு என்ன?
30 முதல் 45 நிமிடங்களுக்குள் தோல்களை எடுத்து விடலாம்.

தோல் தானத்திற்கும் இரத்தகுரூப்பிற்கும் தொடர்பு உள்ளதா?
இல்லை, எந்த இரத்தப்பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் தோல் தானம் செய்யலாம்.

தோல் தானம் செய்ய எப்படி அணுக வேண்டும்? தோல் தானம் பற்றி இன்னும் சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
கங்கா மருத்துவமனையின் தொலைபேசிஎண் 0422 2485000 வைத் தொடர்பு கொண்டுத் தெரியப்படுத்தவும். உங்கள் பெயரும் முகவரியும் தெரிந்தபின் ஒரு மருத்துவர் உங்களை அணுகுவார்.